Friday, May 20, 2011

திருமணம்



திருமணம் என்பது
 இன்று அனைத்து மனித சமூகத்தினரின் வாழ்விலும் மகத்துவம் மிக்க
புனிதமானதோர் சடங்காகத் திகழ்கிறது.ஆனால் திருமணச் சடங்கை நிறைவேறும்
முறைதான் சமூகத்திற்குச் சமூகம் வேறுபடுகிறது. சமூகங்களில் நாகரீக வளர்ச்சி
 தோன்றுவதற்கு முற்பட்ட காலத்தை எடுத்துக்கொண்டால் " திருமணம் " என்பது
தொடர்பான எண்ணக்கருவோ சம்பிரதாயங்களோ காணப்படவில்லை.



வேடுவனாக நாடோடி வாழ்க்கை வாழ்ந்த மனிதன் நாகரீக வளர்ச்சியின் பிற்பாடு
ஓரிடத்தில் நிலையாக தன் வாழ்க்கையை ஸ்திரப்படுத்திக்கொண்ட
காலகட்டத்தில்தான் திருமணம் பற்றிய சிந்தனை மனித சமுதாயத்தில்
தோற்றமெடுத்தது. அந்த வகையில் தொன்மையான காலத் தமிழர்களின் வாழ்க்கையில்
திருமணம் என்ற சடங்கே இருந்திருக்கவில்லை."களவு" வாழ்க்கையே நடைமுறையில்
இருந்தது.



களவு வாழ்க்கை என்பது அன்பு அறிவு அழகு முதலியவற்றில் ஒத்திருக்கும். ஆணும்
 பெண்ணும் ஒருவரையொருவர் கண்டு காதல் கொண்டு உலகத்தார் அறியாத வண்ணம்
மனமொப்பி வாழும் வாழ்க்கையாகும். காலப்போக்கில் இக்களவு வாழ்க்கையில் ஆண்
மகன் தன்னை நம்பி வந்த பெண்ணை ஏமாற்றிவிட்டு மற்றாள் ஒருத்தியுடன் வாழ்க்கை
 நடத்தும் நிலை தோன்றியது.இவ்வாறு களவு வாழ்க்கையில் பொய்யும்
பித்தலாட்டமும் தோன்றிவிட்டமையால் அறிவில் சிறந்த பெரியவர்கள் ஒன்றுகூடி
திருமணம் என்கிற சடங்கை உருவாக்கினார்கள்.



 பெண்கள் தொடர்பான சமூகப் பாதுகாப்பு உடைமைகள் சொத்துக்கள் சம்பந்தமான
பேணுகையை உறுதிப்படுத்தல் குடும்பக் கட்டுக்கோப்பை சீர்குலையாமல்
கட்டிக்காத்தல் போன்ற தேவைப்பாடுகள் திருமணம் பற்றிய எண்ணக்கரு தோற்றமிட்டன
 எனலாம். ஒரு ஆண் பல பெண்களைத் திருமணம் செய்தல் ஒரு பெண் பல ஆண்களைத்
திருமணம் செய்தல் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களுக்கிடையேயான திருமணம் வெவ்வேறு
 பிரதேசங்களில் வாழ்பவர்களுக்கிடையேயான திருமணம் சட்டப்படியான திருமணம் ஒரு
 ஆண் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளல் எனப் பல்வேறு வகையான
திருமணங்கள் வெவ்வேறு சமூகங்களில் தோற்றமெடுத்தன.இன்றைக்கு சுமார் 2 ,500
ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தொல்காப்பியர் தான் இயற்றிய தொல்காப்பியத்தில்
எட்டு வகையான திருமணம் பற்றிக் குறிப்பிடுகிறார்.



* பிரம்மவிவாகம் :> நாற்பத்தெட்டாண்டு பிரமச்சரியம் காத்த ஆண்மகனுக்கு
பன்னிரண்டு வயதுடைய கன்னியை ஆடை அணிகலன்களால் நன்கு
அலங்கரித்துக்கொடுப்பது.



 * பிரசாபத்திய விவாகம் :> மைத்துனன் உறவுடையவனுக்கு பெண்ணின் விருப்பத்திற்கமைய புனிதச் சடங்குகள் மூலம் கொடுப்பது.



 * ஆரிட விவாகம் :> தகுதியுடைய ஒருவனுக்கு பொன்னால் பசுவும் காளையும்
செய்து அவற்றின் நடுவே பெண்ணையும் நிறுத்தி அணிகலன்கள் அணிவித்து நீங்களும்
 இவைபோல வளமுடன் ஒற்றுமையாக வாழ்வீர்களாக என்று வாழ்த்தி நீர் வார்த்துக்
கொடுப்பது.



 * தெய்வ விவாகம் :> வேள்வி நிகழ்த்தும் குருவுக்கு வேள்வித் தீயின் முன்வைத்து கன்னிப் பெண்ணைக் குருதட்சணையாகக் கொடுத்தல்.



 * கந்தர்வ விவாகம் :> ஆண்மகனும் கன்னிப்பெண்ணும் யாரும் அறியா வண்ணம் சந்தித்து கணவன் மனைவியாகக் உறவு கொண்டாடுதல்.



 * அசுரா விவாகம் :> மணமகனிடம் ஏராளமான செல்வத்தைப் பெற்றுக்கொண்டு பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பது.



 * இராட்சஸா விவாகம் :> தான் விரும்பிய பெண்ணை அவள் விருப்பத்திற்கும்
சுற்றத்தார் விருப்பத்திற்கும் மாறாக பலவந்தமாகக் கடத்திச் சென்று அடைவது.



 * பைசாக விவாகம் :> தன்னை விடவும் வயதில் மூத்தவளிடமும் உறங்குகிற வளிடமும் கள்ளுண்டு மயங்கிக் கிடப்பவளிடமும் கூடி மகிழ்வது.



 தமிழர் வரலாற்றில் திருமணச்சடங்கு உருவாக்கப்பட்ட காலத்தில் அது
மூவேந்தர்களுக்கு மட்டுமே உரியதாய் இருந்தது.பின்னர் அனைவருக்கும்
இச்சடங்கு பொருத்தமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கும் உரிய
சடங்காக மாறியது. பண்டைய காலம்தொட்டு இன்று வரையிலான காலப் பகுதியை எடுத்து
 நோக்கினால் மணமகன் மற்றும் மணமகள் குடும்பத்தினரால் கலந்து பேசி ஒழுங்கு
செய்யப்படும் திருமணங்களே செல்வாக்குச் செலுத்தி வகின்றமையை அவதானிக்க
முடியும்.பெரும்பாலான திருமணங்கள் காதல் அடிப்படையிலன்றி பொருளாதாரம்
குடும்ப கெளரவம் போன்ற இதர புறக்காரணிகள் அடிப்படையிலேயே
நிர்ணயிக்கப்படுகிறது.


மேலைத்தேய
 பாரம்பரிய திருமணங்களிலே திருமண மோதிரம் அணிவது கட்டாயமானதாக
உள்ளது.மோதிரத்தின் வட்ட அமைப்பானது திருமணத்தால் ஏற்பட்ட பந்தம்
என்றென்றும் முடிவுறாமல் நீடித்து நிலைக்கவேண்டும் என்பதை
அடையாளப்படுத்துகிறது என்றும் மோதிர விரலிலுள்ள நரம்பு ஒன்று இதயத்துடன்
நேரடியாக தொடர்புறுவதால் திருமணமானது இரு இதயங்கள் சம்பந்தப்பட்டது என்பதை
எடுத்துக் காட்டுகிறது என்றும் நம்பிக்கை நிலவுகிறது.





 1500 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெரும்பாலான திருமணங்கள் வைபவரீதியாகவோ
சாட்சியாளர்களை சாட்சி வைத்தோ நடாத்தப்படவில்லை.1563 ம் ஆண்டுப் பகுதியில்
குறைந்தது இரண்டு சாட்சிகளுடன் வைபவரீதியாக திருமணம் நடத்தப்பட
வேண்டுமென்பது நடைமுறைக்கு வந்தது. "தம்மி ஸ்பிறோட் என்ற மதபோதகர்
திருமணமானது ஆண்களையும் பெண்களையும் பாவங்களிலிருந்து தடுக்கிறது எனக்
கூறியுள்ளார்.





 லௌரா ரெனோல்ட்ஸ் என்பவர் 8 - 14 நூற்றாண்டு காலப்பகுதியிலான திருமணம்
பற்றி பின்வருமாறு சொல்கிறார். திருமணம் என்பது ஆண் பெண் ஆகிய இருவரையும்
இணைத்து வைக்கின்ற புனிதச் சடங்காகும்.ஒருவர் மேல் ஒருவர் கொண்ட காதலாலோ
அன்றி வேறேதும் காரணங்காலாலோ ஒரு ஆணும் ஒரு பெண்ணும் திருமணத்தில்
இணையும்போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிடுகிறது.இருவரும் தனித்தனியாக
 பாரியளவிலான திருமணப் பொறுப்புகளைச் சுமக்க வேண்டிய கடப்பாடு
உடையவர்களாகிறார்கள்.





பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ள நிலைமையிலும்
 இடையிடையே மகிழ்ச்சிகரமான பொழுதுகள் அத்தம்பதிகளுக்கு கிடைக்கவே
செய்கின்றன.அவ்வினிய பொழுதுகள் திருமண வாழ்வின் உறுதிப்பாட்டைக்
கட்டியெழுப்ப உதவுவனவாக உள்ளன. திருமணம் என்பது காலங்காலமாக பல்வேறு பரிணாம
 நிலைகளைத் தொட்டு வளர்ச்சி கண்டபோதும் அதன் உள்ளார்ந்த தத்துவங்கள்
பாரம்பரியமனவை.ஒவ்வொரு சமூகத்தினது திருமண முறையும் வேறுபட்ட நிலைமையிலும்
அத்திருமணச் சடங்குகளில் பொதிந்திருக்கும் உட்கருத்துக்கள் அர்த்தம்
நிறைந்தவை என்பது நிரூபிக்கப்பட்ட உண்மைகள்.

No comments:

Post a Comment